1 மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,
2 அதற்கு விரோதமாக முற்றிக்கைபோட்டு, அதற்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோட்டு, அதற்கு விரோதமாக இராணுவங்களை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்கும் இயந்திரங்களை வை.
3 மேலும் நீ ஒரு இருப்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்துக்கும் நடுவாக இருப்புச்சுவராக்கி, அது முற்றிக்கையாய்க் கிடக்கும்படிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிக்கைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக்கு அடையாளம்.
4 நீ உன் இடதுபக்கமாய் ஒருக்களித்துப்படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாய் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.
5 அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.
6 நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப் பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.
7 நீ எருசலேமின் முற்றிக்கைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த புயமுமாக இருந்து, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு.
8 இதோ, நீ அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக்கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.
9 நீ கோதுமையையும் வாற்கோதுமையையும், பெரும்பயற்றையும், சிறுபயற்றையும், தினையையும், கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்து சாப்பிடுவாயாக.
10 நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும்; அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக.
11 தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.
12 அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக.
13 அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.
14 அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன்.
15 அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன் அப்பத்தைச் சுடுவாயாக என்றார்.
16 பின்னும் அவர்: மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,
17 நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.