1 பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.

2 அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும்.

3 வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.

4 அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.

5 ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.

6 நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.

7 மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.

8 தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான்.

9 தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன்.

10 ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது.

11 மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.

12 அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?

13 என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.

14 அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.

15 துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.

16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

17 உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.

18 கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.

19 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.

20 துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கருடைய விளக்கு அணைந்துபோகும்.

21 என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, கலகக்காரரோடு கலவாதே.

22 சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்?

23 பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.

24 துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.

25 அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.

26 செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.

27 வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு.

28 நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.

29 அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.

30 சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.

31 இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது.

32 அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.

33 இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?

34 உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.